நிறுத்தி வைக்கப்பட்ட பணி நியமனத்திற்கு தடை நீக்கம் – வேலை தேடுவோருக்கு
மகிழ்ச்சியான செய்தி
கொரோனா நிதி நெருக்கடியின் காரணமாக அரசு துறைகளில் புதிய பணி நியமனத்திற்கு
தடை விதிக்கப்பட்டு நிறுத்தி வைக்கப்பட்டது. ஆனால் தற்போது அந்த தடையினை
நீக்கம் செய்ய தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.
கொரோனா ஊரடங்கு காரணமாக தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு
அமல்படுத்தப்பட்டது. இதனால் அனைத்து துறை நிறுவனங்களும் மூடப்பட்டு தமிழகமே
வெறிச்சோடியது. இதனால் அரசிற்கு பெரும் நெருக்கடியும் ஏற்பட்டது. ஏனெனில்
டாஸ்மாக் முதல் போக்குவரத்து, பத்திர பதிவு என அரசிற்கு வருவாயினை பெருமளவு
ஈட்டித் தரும் துறைகள் அனைத்தும் ஊரடங்கினால் முடக்கம் பெற்று விட்டது.
இதனால் அரசிற்கு ஆண்டுதோறும் சராசரியாக வரும் ரூ.1.50 லட்சம் கோடி ஆனது இந்த
ஆண்டு கிடைக்காமல் போனது. இது அரசின் நெருக்கடியினை மேலும் அதிகப்படுத்தியது.
வருவாயில்லாமல் செலவினங்கள் மட்டும் அதிகரித்து கொண்டே சென்றது.
சிக்கன நடவடிக்கை !!
செலவினங்களை கட்டுப்படுத்த அரசானது பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
அதன் படி அரசு விழாக்களில் பூங்கொத்துகள், பொன்னாடைகள் மற்றும் நினைவு பரிசுகள்
வழங்குவது ஆகியவற்றை அரசு நிறுத்தி வைத்தது. மேலும் அரசு துறைகளில் புதிய
பணியிடங்களை உருவாக்குவதற்கும் தடை விதித்தது. முடிந்தவரை அரசின் செலவுகளை
கட்டுப்படுத்த அனைத்து வழியிலும் முயற்சிகளை அரசு மேற்கொண்டது.
தடை நீக்கம் !
ஆனால் தற்போது ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள்
அளிக்கப்பட்டதால் தமிழகம் இயல்புநிலைக்கு திரும்பியுள்ளது. இதனால் புதிய
பணியிடங்களை உருவாக்க விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டது. இதனை தமிழக நிதித்துறை
செயல் அறிவித்து உள்ளார். மேலும் கருணை அடிப்படையில் வேலை வழங்குவதற்கு தடை
இல்லை என்றும் 3 ஆண்டுகளாக நிரப்பப்படாமல் இருக்கும் ஆரம்ப நிலை பணியாளர்கள்
இடங்களை நிரப்பலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அவற்றிற்கு தமிழக
அரசுப்பணியாளர் தேர்வாணையத்திடம் அனுமதி பெற்றிருக்க வேண்டும்.